< Back
மாநில செய்திகள்
வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
14 Jun 2023 2:11 AM IST

வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டு காய்கறி தோட்டம்

மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதில் காய்கறிகளின் பங்கு மகத்தானது. பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓய்வு நேரத்தை உபயோகமாக செலவிடவும், உடலுக்கும், மனதிற்கும், ஆரோக்கியம் அளிக்கும் சூழலை உருவாக்கும் வகையிலும் வீட்டில் காய்கறி தோட்டங்களை அமைக்கலாம். ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் காய்கறி தோட்டம் அமைக்க ஏற்ற தருணம் ஆகும்.

விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க தரமான காய்கறிகளை வீட்டுத்தோட்டம் மூலம் பெறலாம். வீட்டுத் தோட்டம் அமைப்பதால் நச்சு மருந்துகள் இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். குடும்பத்திற்கு காய்கறி வாங்குவதற்கான செலவைக் குறைப்பதுடன், வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், கடையில் வாங்குவதைக் காட்டிலும் சுவையாக இருக்கும்.

காய்கறி விதைகள்

வீட்டுத் தோட்டத்திற்கு சமையல் அறையில் வீணாகும் நீர் மற்றும் பொருட்களை பயன்படுத்தலாம். கீரை வகைகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம், பூசணி, பாகல், புடல், பீர்க்கு, சுரை, சாம்பல்பூசணி ஆகிய காய்கறிகளின் விதைகளை பயிரிடுவது பொருத்தமாக இருக்கும். சூரிய ஒளி படக்கூடிய, நல்ல வடிகால் வசதியுள்ள இடம் இருக்க வேண்டும். இந்த தோட்டம் அமைப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.  

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான தரமான காய்கறி விதைகளை வாங்கும்போது, மாநில அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் வாங்க வேண்டும். மாறாக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில், மளிகை கடைகளில் அல்லது சந்தைகளில் விற்கப்படும் காய்கறி விதைகளை வாங்குவதை தவிர்த்து, கடைகளில் விதைகள் வாங்கும்போது அதற்குரிய பில் கேட்டுப்பெறுவது மிகவும் அவசியம் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்