நாமக்கல்
சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு
|சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்து வழக்குகள்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றினார். அப்போது 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்தமங்கலம் கோர்ட்டில் இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன், வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார். தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்டம் சவுத் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
பிடிவாரண்டு
இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில் சேந்தமங்கலம் கோர்ட்டில் இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சேந்தமங்கலம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.