விருதுநகர்
இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
|கிராமசபை கூட்டத்தில் விவசாயியை ஊராட்சி செயலாளர் மிதித்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் கிராம பஞ்சாயத்தில் கடந்த காந்தி ஜெயந்தியன்று கிராமசபை கூட்டம் நடந்தபோது விவசாயி அம்மையப்பன் என்பவரை பஞ்சாயத்து செயலாளர் தங்கப்பாண்டி காலால் மிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வன்னியம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தங்கப்பாண்டி மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.அதே நேரத்தில் அவரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகிய 2 பேரையும் விருதுநகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கிராமசபை கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் செந்தில், பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி மற்றும் தலையாரி முத்துலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதில், கிராம சபை கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்காததற்கு உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைகள் ேபாலீசார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.