அரியலூர்
பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
|பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா 2 நாட்கள் முகாமிட்டு கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம், மேலக்குடியிருப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சமையல் கூட பணியையும், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா முடிவுற்ற பணிகளை விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மற்றும் முறையாக பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பொதுமக்களையும் முறையாக சென்று சேரும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.