காஞ்சிபுரம்
மாங்காடு நகராட்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
|மாங்காடு நகராட்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர மன்ற கட்டிடம் மற்றும் விளையாட்டு பூங்கா, நடைபாதையுடன் கூடிய குளம் சீரமைக்கும் பணி என பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதனை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
விளையாட்டு பூங்கா பணியின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் தரமான பொருட்களை கொண்டு பணிகள் நடத்த வேண்டும் எனவும் நகராட்சி அதிகாரிகள் பணிகள் நடக்கும் போது உடனிருந்து கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் அதிக அளவில் நின்று கொண்டிருந்ததால் அங்கு இறங்கி சென்ற அவர் திடீரென அங்கு இருந்த ஊழியரிடம் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, மண்எண்ணெய் இருப்பு எவ்வளவு உள்ளது என்று கேட்டிருந்தார். அதுமட்டுமின்றி அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் முறையாக அரிசி, மண்எண்ணெய் கிடைக்கிறதா என கேட்டறிந்தார.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் கொடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி திடீரென ரேஷன் கடையில் வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். அவருடன் நகர மன்ற தலைவர் சுமதி முருகன், நகராட்சி கமிஷனர் சுமா, நகராட்சி பொறியாளர் நளினி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.