நீலகிரி
மேம்பாட்டு பணிகளை ரெயில்வே அதிகாரி ஆய்வு
|ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளை ரெயில்வே அதிகாரி ஆய்வு செய்தார்.
ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளை ரெயில்வே அதிகாரி ஆய்வு செய்தார்.
நவீன வசதிகள்
நாடு முழுவதும் 1,275 ரெயில் நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்காக அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சேலம் ரெயில்வே கோட்டத்தில் ஊட்டி, குன்னூர் உள்பட சுமார் 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா குன்னூர் மற்றும் ஊட்டி ரெயில் நிலையங்களுக்கு வந்து மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஊட்டியில் வாகன நிறுத்தும் இடத்தை பார்வையிட்டார். அப்போது அவருடன் ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.
பாரம்பரியம் மாறாமல்...
இதுகுறித்து ெரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
குன்னூர் ரெயில் நிலையம் ரூ.7 கோடி, ஊட்டி ரெயில் நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 4 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் நுழைவுவாயில், வெளியேறும் வாயில் என தனி தனி பகுதிகள் கட்டப்பட உள்ளது. ரெயில் நிலைய உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பயணிகள் காத்திருப்பு அறை மாற்றப்பட்டு தொலைக்காட்சி அமைக்கப்படும்.
ஊட்டி மலை ரெயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகாரம் பெற்று உள்ளதால், மற்ற ரெயில் நிலையங்களை போல் இல்லாமல் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் பாரம்பரியம் மாறாமல் இந்த பணிகள் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.