< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
விழுப்புரம்
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
22 Feb 2023 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா நேற்று விழுப்புரம் வருகை தந்து, மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மயிலம் ஒன்றியம் சித்தணி ஊராட்சியில் தோட்டக் கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் ரூ.1,34,379 மதிப்பில் 1.10 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பாகற்காய், முட்டைகோஸ் மற்றும் மணிலா பயிர்களை பார்வையிட்டார். பின்னர் விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி ஊராட்சியி கிளை நூலகம் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட அவர், புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு நாள்தோறும் தூய்மைப்பணியை மேற்கொண்டு நூலகத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டுமென நூலகருக்கு அறிவுறுத்தினார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

அதனை தொடர்ந்து ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர், மருத்துவர்கள், செவிலியர்கள் வருகைப்பதிவேடு மருந்து கையிருப்புப்பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மதுரப்பாக்கம் துணை சுகாதார நிலையத்தில் 'மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளின் விவரத்தை கேட்டறிந்ததுடன் தொடர் சிகிச்சை பெற்று வரும் பயனாளிக்கு 'மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகமும் வழங்கினார்.

நூலகம், அறிவுசார் மையம்

தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சித்துறை சார்பில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2021- 2022-ன் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் விழுப்புரம் கல்லூரி சாலையில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு விழுப்புரம் நகராட்சியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு தங்கி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சி.பழனி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, ஆதிதிராவிட நல அலுவலர் பத்மலதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சண்முகம், உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்