திண்டுக்கல்
பேரூராட்சிகளின் ஆணையர் ஆய்வு
|வடமதுரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் வடமதுரை பேரூராட்சியில் மந்தை குளத்தை தூர்வாரி, சுற்றிலும் ரூ.4½ கோடி செலவில் நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்தார். இதில் பேருராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், மண்டல செயற்பொறியாளர் செல்வராஜ், மாவட்ட உதவி செயற்பொறியாளர் இசக்கி, வடமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) முகமது யூசுப், 14-வது வார்டு கவுன்சிலர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல் சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள வளமீட்பு பூங்காவில் ஆணையர் திடீர் ஆய்வு செய்தார். குப்பை உரக்கழிவுகளை ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்ய அறிவுறுத்தினார். மேலும் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து தராதவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சின்னாளப்பட்டி ஆதி திராவிடர் காலனி காமாட்சி நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுகழிப்பறையில் கழிவுகள் வெளியேறியதை பார்த்து அதனை உடனே சரி செய்ய உத்தரவிட்டார். சின்னாளப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், பொது சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை உடனே சீர்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வின்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி செயற்பொறியாளர் இசக்கி, சின்னாளப்பட்டி செயல் அலுவலர் நந்தகுமார், பேரூராட்சி தலைவர் பிரதீபா, துப்புரவு ஆய்வாளர் கணேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.