புதுக்கோட்டை
மீன்வளத்துறை இணை இயக்குனர் தலைமையில் 410 விசைப்படகுகள் ஆய்வு
|புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா தலைமையில் 410 விசைப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டன.
மீன்பிடிக்க தடை
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலமாக ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரையில் ஏற்றி பழுது நீக்கி பராமரிப்பது வழக்கம். மேலும் கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் சில கடலில் மூழ்கும் நிலை தொடர்ந்து வருவதால் கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மீன் பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுது நீக்கி வண்ணம் பூசி பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
விசைப்படகுகள் ஆய்வு
அரசின் உத்தரவு முறையாக செயல்படுத்தப்பட்டு மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுது நீக்கி பராமரிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. அதன்படி ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 410 விசைப்படகுகள் நேற்று காலை முதல் மீன்வளத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா தலைமையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் மதுரை ஞானம், திருச்சி ரம்யா லட்சுமி, ஊட்டி ஜோதி லட்சுமணன், புதுக்கோட்டை சின்னகுப்பன் ஆகியோர் மேற்பார்வையில் 8 அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு அணிக்கு தலா 2 பேர் வீதம் 20 மீன்வளத்துறை அதிகாரிகள் 410 விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.