கடலூர்
மாவட்டத்தில் சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு
|கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.Research
கடலூர் வந்த குழு
தமிழக சட்டசபை கூட்டத்தில் இதுநாள் வரை எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?, எவ்வளவு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது?, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது இதுவரை எவ்வளவு சதவீத பணிகள் நடந்துள்ளன? மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று கடலூர் வருகை தந்தனர்.
இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், சக்கரபாணி, அருள், வேல்முருகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினர் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனுடன் சென்று நேற்று காலை கடலூர் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர், கடலூர் துறைமுகத்தில் நடைபெறும் தூர்வாரும் பணி, பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுற்றுச்சூழல் கண்காணிப்பு
அதனை தொடர்ந்து கடலூர் சிப்காட்டில் உள்ள டாக்ரோஸ், டான்பாக் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழுவினர், சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் ஏற்படும் மாசு பிரச்சினை மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண்பதற்கு மாதாந்திரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் தலைமையில் கூட்டமும், அதில் தீர்க்கப்படாத பிரச்சினையை மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வந்த கூட்டமும் நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ளது. இந்த கூட்டத்தை மறுபடியும் தடையின்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட குழுவினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து பெருமாள் ஏரி, வடக்குத்து கன்னியக்கோவில் ஓடையில் கட்டப்படும் பாலம், பண்ருட்டி அரசு மருத்துவமனை, பண்ருட்டி பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.