செங்கல்பட்டு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
|கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நடைபெறும் இறுதி கட்ட பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
வண்டலூர்,
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களில் செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணங்களை மேற்கொள்வதற்காக சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்ட பணிகளை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்கள், பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள், பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், பயணிகள் தங்கும் அறைகள், பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்டு வெளியே செல்லும் பகுதிகள், பஸ் நிலையத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள பல்வேறு வகையான ஓவியங்கள் ஆகியவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். மேலும் பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் இறுதி கட்டமாக நடைபெறும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட சி.எம்.டி.ஏ. அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தபோது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே என்பதால் பஸ் நிலையத்தை திறப்பதற்கு முன்பு சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலையை கடக்கும் முக்கிய பகுதிகளில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க வேண்டும், 10 நிமிடம் பலத்த மழை பெய்தாலே கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நுழைவாயில் முன்பு மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,
பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் மீனாட்சிபுரம் அய்யஞ்சேரி பிரதான சாலையை விரைவாக அகலப்படுத்த வேண்டும், இதே போல அய்யஞ்சேரி மீனாட்சிபுரத்திலிருந்து வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் சாலையை அகலப்படுத்த வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் அதிகாரிகள் விரைவாக செயல்படுத்தி கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பயணம் மேற்கொள்ள வழி வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.