டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சென்னை,
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே கூட இயக்கப்படும். சில நேரங்களில் காலதாமதாகவும் திறக்கப்படும்.
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வந்ததால் வழக்கம் போல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டு விடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
அதற்கு ஏற்றபடி குறுவை சாகுபடிக்கும் விவசாயிகள் தயாராகி வந்த நிலையில் விவசாயிகள் எதிர்பார்த்தபடி ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முதல்-அமைச்ச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் நடைபெறும் தூர்வாரும் பணி குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.