கிருஷ்ணகிரி
புதிய தேர் அமைக்கும் பணி நிறைவு
|ஓசூர் மலைக்கோவிலில் புதிய தேர் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் நேரில் ஆய்வு செய்தார்.
ஓசூர்
ஓசூர் தேர்பேட்டையில் உள்ள சந்திரசூடேஸ்வரர் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். விழாவின்போது, முதலில் விநாயகரை வைத்து சிறிய தேர், தொடர்ந்து சந்திரசூடேஸ்வரசாமியின் பெரிய தேரும், அடுத்ததாக மரகதாம்பிகை அம்மனின் தேரும், பக்தர்களால் வடம்பிடித்து இழுத்து செல்லப்படும். இந்த நிலையில், மரகதாம்பிகை அம்மன் தேர் பழுதாகியதால், புதிய தேர் அமைக்கும் பணி, ஓசூர் தேர்பேட்டையில், திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி இளவரசன் குழுவினரால் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது, இந்த பணி நிறைவடைந்தது. சக்கரங்கள் மட்டும் பொருத்தும் பணி பாக்கி உள்ளது. இதையடுத்து நேற்று சந்திரசூடேஸ்வரர் தேரோட்ட கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தேரை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மரகதாம்பிகை அம்மன் தேர், 14 அடி உயரம், 14 அடி அகலம் கொண்டதாகும். இந்த தேரில் பூதகணங்கள், யாழி, தல வரலாற்று சிற்பங்கள், குதிரை, யானை போன்றவை பழமை மாறாமல் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர் 40 டன் எடை கொண்டதாக இருக்கும். தேர் பணிக்கு, தேக்கு, மருதம், இலுப்பை மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை நன்கொடையாளர்கள் வழங்கி உள்ளனர். அறநிலைத்துறையின் ரூ.3.69 லட்சம் பங்களிப்புடன், தேர் அமைக்கும் செலவு ரூ.1 கோடியை எட்டிவிட்டது. அறநிலையத்துறை சார்பில் தேரின் முக்கிய அச்சாணி மற்றும் 4 சக்கரங்கள், திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வர வேண்டும். அவை வந்தவுடன் தேரில் பொருத்தி, மாதிரி ஓட்டம் விடப்படும். இந்த பணி நிறைவடைந்தால், வருகிற மார்ச் மாத தேர்த்திருவிழாவிற்கு மரகதாம்பிகை அம்மன் தேர் தயாராகி விடும். தமிழக அரசு அச்சாணி மற்றும் சக்கரங்களை பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது, ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளர் முனிராஜ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, பத்தலபள்ளி கோபால், தொழில் அதிபர் சின்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.