கிருஷ்ணகிரி
தற்காலிக தடுப்பு அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
|கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் தற்காலிக தடுப்பு அமைப்பது குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் தற்காலிக தடுப்பு அமைப்பது குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நோயாளிகள் சிரமம்
கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்ற இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அத்துடன் இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் டாக்டர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இவர்கள் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் நோயாளிகள், பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்பட்டனர். எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
மருத்துவ அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற சுமார் 2 ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. இதனால் இந்த இடத்தில் வாகனங்கள் மெதுவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர் யுவராஜ், புதிய மேம்பாலம் அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளர் கில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலர் சரவணன், இளநிலை நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் தற்காலிக தடுப்பு அமைக்க ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.