< Back
மாநில செய்திகள்
பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

வடகிழக்கு பருவமழையையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுழற்சி முறையில் அலுவலர்களை நியமித்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழையையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுழற்சி முறையில் அலுவலர்களை நியமித்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் சாந்தி நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் மழைக்காலங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதோடு பேரிடர் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04342-231500, 04342-231077, 04342-230067 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் 89038 91077 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பேரிடர் பாதிப்பு குறித்த உரிய புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை தெரிவிக்கலாம்.

பாதுகாப்பு

அனைத்து துறை அலுவலர்களும் மாவட்டத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளில் தயார் நிலையில் இருப்பதோடு, தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்திட வேண்டும். பேரிடர் காலங்களில் உடனுக்குடன் தகவல்களை பெறுவதற்கு கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்களை நியமித்து தொடர்ந்து இக்கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். அதை பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த சிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இயற்கை இடர்பாடுகளின் போது பெறக்கூடிய தகவல்களை உடனடியாக உரிய அலுவலர்களுக்கு தெரிவித்து, தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் அந்தந்த துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஏரி, குளங்கள், குட்டைகள், கிணறுகள் போன்ற நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, நீர் நிலைகளின் அருகில் விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது. குழந்தைகளை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

மேலும், மழைக்காலங்களில் ஆற்றுப்பகுதிகளில் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதையோ, ஆற்றை கடக்க முற்படுவதையோ, கால்நடைகளை ஆற்றின் குறிக்கே அழைத்து செல்வதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் ரமேஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்