< Back
மாநில செய்திகள்
சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மனுக்கள் குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டது. குழுவின் தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் தலைமையில் குழு உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, கிரி, கோவிந்தசாமி, சந்திரன், செந்தில்குமார், மதியழகன், மாங்குடி மற்றும் தர்மபுரி கலெக்டர் சாந்தி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், பேரவை இணைச்செயலாளர் சாந்தி ஆகியோர் மனுக்களின் அடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவினர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து அருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருக்கும் போது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் உயரத்தை அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தாலும் சுற்றுலா பயணிகளுக்கு அருவியை கண்டு ரசிக்க அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மருத்துவமனை

இதனைத் தொடர்ந்து இந்த குழுவினர் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவை ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றனர். தொடர்ந்து தர்மபுரி அடுத்த சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் வெள்ளாளப்பட்டி அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து நீரேற்று மூலம் ஏரியை நிரப்பி வருகின்றனர்.

இந்த ஏரியையும், சனத்குமார் நதி மற்றும் இலக்கியம்பட்டி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுகின்ற பகுதியையும் மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சம்பத்குமார், தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கூட்டம்

இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழுவின் தலைவர் கோவி.செழியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சாந்தி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது பல ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புலிக்கரை ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மனுக்கள் குழுவினரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த குழுவிடம் பொதுமக்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள்

ஆய்வுக்கூட்டத்தின் முடிவில் சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினோம். போக்குவரத்து வசதி, புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம், நிழற்குடை, ஏரிகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 108 மனுக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டன. மனுதாரர்களின் கோரிக்கைகள் குறித்தும், அது தொடர்பாக அதிகாரிகளின் பதில்கள் குறித்தும் களத்தின் நிலவரம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் 21 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஏழை, எளிய மக்களுக்கு பட்டாக்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில கோரிக்கை மனுக்கள் உயர் அதிகாரிகளின் ஆய்வுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கை மனுக்கள் உரிய ஆய்வுக்கு பின்னர் அதிகாரிகளிடம் கருத்துரு பெறப்பட்டு முதல்- அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற சட்ட பேரவை மனுக்கள் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்