தர்மபுரி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை கே.பி.அன்பழகன் நேரில் ஆய்வு
|காரிமங்கலம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை கே.பி.அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.
காரிமங்கலம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் காமராஜர் நகர், அன்பு நகர், கைலாசகவுண்டர் கொட்டாய், முறுக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்ற அவர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்த நிலையில் ஏரிகளுக்கு செல்லக்கூடிய பாதைகளை முறையாக சீரமைத்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. மாவட்ட நிர்வாகம் ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாணிக்கம், நகர செயலாளர் காந்தி, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவன், வக்கீல் பாரதி, நிர்வாகிகள் பழனி, சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.