தர்மபுரி
ராமக்காள் ஏரியை கலெக்டர் நேரில் ஆய்வு
|தர்மபுரி ராமக்காள் ஏரிைய மேம்படுத்துவது குறித்து கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி ராமக்காள் ஏரியை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராமக்காள் ஏரி
தர்மபுரி நகரையொட்டி கிருஷ்ணகிரி ரோட்டில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 205 ஏக்கர் பரப்பளவில் ராமக்காள் ஏரி உள்ளது. இதன் அருகாமையில் உள்ள சுமார் 265 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு இந்த ஏரி வாய்ப்பாக இருந்தது. மேலும் தர்மபுரி நகரின் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரியின் கரைகள் மற்றும் நுழைவுவாயில்களை மேம்படுத்தவும், ஏரி கரையை அழகுபடுத்தி, நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பசுமை நிறைந்த மரங்கள் நடுதல், பூக்கள் நிறைந்த வனங்களை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த ஏரிக்கரை பகுதியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய விளையாட்டு சாதனங்களை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமக்காள் ஏரியை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், தாசில்தார் ராஜராஜன், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் மோகனப்பிரியா, மாலதி, நிலஅளவை அலுவலக மேலாளர் கல்பனா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.