ராமநாதபுரம்
ரேஷன்கடை, அங்கன்வாடி கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
|ரேஷன்கடை, அங்கன்வாடி கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவிலும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. மண்டபம் உள்வட்டத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை, நாகாச்சி, புதுமடம், என்மனங்கொண்டான், பிரப்பன்வலசை, நொச்சி ஊருணி, சாத்தகோன்வலசை, மண்டபம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெற்ற தீர்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து 59 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கழுகூரணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12.83 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ரேஷன்கடை கட்டிட பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியையும், புத்தேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகை நகரில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடையையும், சூரன்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாகுடி சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.12 லட்சத்தில் அமைக்கப்பட்டுவரும் அமிழ்குளம் பணியையும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் நில அளவை உதவி இயக்குனர் கந்தசாமி, ராமநாதபுரம் தாசில்தார்கள் முருகேசன், தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.