தர்மபுரி
பாலக்கோட்டில்அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை20 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல்
|பாலக்கோடு:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு `சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி இறந்தார். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின்பேரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்,
அதன்படி பாலக்கோட்டில் எம்.ஜி.ரோடு, தக்காளிமண்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் துரித உணவக ஓட்டல்கள், தாபாக்கள் மற்றும் இறைச்சி கடைகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை நடத்தினார். அப்போது சுமார் 15-க்கும் மேற்பட்ட உணவகங்களில் சமைத்த இறைச்சி, சமைக்காத இறைச்சி, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், சில்லி சிக்கன், சில்லி மீன் மற்றும் கிரேவி, பிரியாணி உள்ளிட்ட துரித உணவுகள், மயோனைஸ், நாள்பட்ட இறைச்சி, குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த இறைச்சி மற்றும் செயற்கை நிறமி கலந்த இறைச்சி என 20 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.