சேலம்
கைதிகளுக்கான லோக் அதாலத்:சேலம் மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
|சேலம்
சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கான லோக் அதாலத் நடைபெறுவதை நேற்று ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
லோக் அதாலத்
சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் தண்டனை பெற்றவர்களும் பாதுகாப்பு கருதி இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறு, சிறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்களுக்கு சிறையிலேயே விசாரணை நடத்தி வழக்கு முடித்து வைக்கும் வகையில் லோக் அதாலத் நடத்த சிறைத்துறை முடிவு செய்திருந்ததது.
ஐகோர்ட்டு நீதிபதி
அதன்படி சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கான லோக் அதாலத் நேற்று நடந்தது. இதில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நீதிபதிகள் சிறைக்கு வந்தனர். சிறையில் 42 கைதிகள் வழக்கை முடித்துக்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் கலந்து கொண்டு லோக் அதாலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சிறையில் உள்ள நூலகம், சிறை மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து சமையல் கூடத்திற்கு சென்ற ஐகோர்ட்டு நீதிபதி, கைதிகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த சாதம், ரசம், பொறியல் ஆகிய உணவை சாப்பிட்டு ருசித்து பார்த்து அவை தரமானதாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். அப்போது, உணவு அனைத்தும் சுவையுடன் இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
காய்கறிகள்
பின்னர் சமையல் கூடத்தில் காய்கறிகள் இருப்பதை பார்த்து உணவுக்கு தேவையான காய்கறிகள் எங்கு வாங்குகிறீர்கள்? என்று ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் கேட்டார்.
அதற்கு திறந்த வெளி சிறையில் கத்தரிக்காய், தக்காளி, சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை கைதிகளே விவசாயம் செய்வதாகவும், அதன்மூலம் கிடைக்கும் காய்கறிகளை உணவுக்கு பயன்படுத்தி வருவதாகவும் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் தெரிவித்தார். அப்போது, கைதிகளின் செயலுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
மேட்டூர் அணை ஓவியம்
இதனிடையே, சிறையில் 7-வது பிரிவில் உள்ள சுவரில் கைதிகள் சிலர் மேட்டூர் அணையில் 16 மதகு கண் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்லும் ஓவியத்தை மிகவும் தத்ரூபமாக பெயிண்டு மூலம் வரைந்திருந்ததை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் பார்வையிட்டார்.
அந்த ஓவியத்தின் முன்பு அவரும், சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத், மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் சந்திரமவுலி ஆகியோர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி உடன் இருந்தார்.