சேலம்
ஆத்தூரில்டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வுமதுபிரியர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு
|ஆத்தூர்
ஆத்தூரில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். கடையை மூடி சோதனை நடத்தியதால் மதுபிரியர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு சென்னை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குழுவினர் வந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க நின்ற மதுபிரியர்களிடம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுகிறதா? கடைகளில் மதுபான இருப்பு கணக்குகள் முறையாக கையாளப்படுகிறதா? என திடீரென ஆய்வு செய்தனர்.
ஆத்தூர் மஞ்சினி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இருப்பு இருந்த மதுபாட்டில்களும், கணக்கு நோட்டில் இருந்த மதுபாட்டில்களும் மாறுதல் இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து கடையை மூடிவிட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது மதுபாட்டில்கள் வாங்க வந்த மதுபிரியர்கள் கதவை தட்டி மதுபாட்டில் கொடுத்துவிட்டு நீங்கள் ஆய்வு நடத்துங்கள் என கூறினர். ஆனால் அதிகாரிகள் கதவை திறக்கவில்லை.
விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை
இதனால் ஆத்திரம் அடைந்த குடிமகன்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்கு இருந்த மதுபிரியர்களை விரட்டினர். பின்னர் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.