< Back
மாநில செய்திகள்
கல்லாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கல்லாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
26 July 2023 1:26 AM IST

கல்லாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தொடங்க வலியுறுத்தப்பட்டது.

வட்டித்தொகை

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன் மற்றும் பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜாசிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி திட்டத்திற்கு 9,142 கரும்பு விவசாயிகளிடம் இருந்து ரூ.7 கோடியே 87 லட்சத்து 75 ஆயிரமும், ஆலையின் பங்குதாரர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 27 லட்சத்து 9 ஆயிரத்து 222-ம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆலையின் பங்குதாரர்கள் பேரவை கூட்டத்தில் அளித்த வாக்குறுதியின்படி பிடிக்கப்பட்ட தொகைக்கு பங்குப்பத்திரமும், வட்டித்தொகையையும் உடனே வழங்கிட சர்க்கரைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும், என்றார்.

வெங்காய கொட்டகை

ராஜீவ் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்மரி வரதராஜன் பேசுகையில், சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வெங்காய கொட்டகை அதிகளவில் மானியத்தில் கிடைக்க தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் பேசுகையில், வேளாண்மை விஞ்ஞானி சுவாமிநாதன் பரிந்துரையின்படி நெல்குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம், மக்காசோளத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும், என்றார்.

இயற்கை விவசாயம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லதுரை பேசுகையில், பெரம்பலூர் உழவர் சந்தையில் தரமான காய்கறிகளின் விதைகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். முன்னோடி விவசாயி தழுதாழை சேகர் பேசுகையில், விவசாயிகளுக்கு தமிழக அரசு இடுபொருட்களை மானிய விலையில் வழங்கி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும், என்றார்.

ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கண்ணபிரான் பேசுகையில், வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி அருகே சின்னமுட்டுலு பகுதியில் பச்சைமலை கல்லாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை மறு ஆய்வு செய்து அணை கட்டும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்குள் மரங்களை டெண்டர் விடாமல் வெட்டியுள்ளனர். ஆலையின் தலைமை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தக்காளி-சின்ன வெங்காயம்...

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன், உழவர் உழைப்பாளர் சங்க தலைவர் புதுக்குறிச்சி ராமராஜ், உழவர் மன்ற குழு பொறுப்பாளர் குரும்பலூர் ரமேஷ், விவசாயிகள் சங்க பிரதிநிதி ராஜீ, துங்கபுரம் ராமலிங்கம், தெரணி ராஜா, மணி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் பதில் அளித்து பேசுகையில், தக்காளி மற்றும் சின்னவெங்காயம் எல்லா காலங்களிலும் விளைவிக்க வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொட்டரை நீர்த்தேக்கத்தில் பாசன வாய்க்கால் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 11 ஏரிகளில் சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கேற்ப பனை மரக்கன்றுகள், பனைவிதைகள் வழங்கப்படும். பெரம்பலூரில் பிளஸ்-2 முடித்து உயர்கல்வி பயிலச்செல்லும் மாணவர்களுக்காக வங்கிகள் மூலம் கல்விக்கடன் மேளா விரைவில் நடத்தப்படும். தெரணியில் உள்ள ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மேலும் செய்திகள்