திருச்சி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
|பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சையது அபுதாகீர் தலைமை தாங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், நேரடி நியமன அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் பதவி உயர்வில் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட முன்னுரிமை எவ்விதத்திலும் பாதிப்படையாத வகையில் உரிய விதி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்கிட வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்தவாறு, தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வு திட்டத்தினை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அமைச்சர், வருவாய் துறை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரை நேரில் சந்தித்து பெருந்திரள் முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தர்மராஜ், நிறுவனத் தலைவர் இருளப்பன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.