அரியலூர்
10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தல்
|10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். முன்னதாக, நிர்வாகி ராமசாமி வரவேற்று பேசினார். செயலாளர் கலியமூர்த்தி அறிக்கைகளை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி வரவு-செலவு கணக்குகளை வாசித்தார். முன்னதாக மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட மலங்குடியிருப்பு ஏரி, செங்குந்தபுரம் மீனாம்பாடி ஏரி, இடையான்குளம் ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூய்மை செய்து நடைபாதை அமைத்துள்ளதை பாராட்டுவது, இதேபோல் ஆவேரி, கொக்கனேரி, பழுப்பேரி, உய்யகொண்டான் ஏரிகளை தூய்மைப்படுத்தி நடைபாதை அமைக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். கருணைத்தொகை பிடித்ததை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும். 70 வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின்படி 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி தர வேண்டும். கல்வித்துறையிலும், அரசு அலுவலகங்களிலும் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நிர்வாகி ராமையன் நன்றி கூறினார்.