அரியலூர்
பதவி உயர்வு, பணியிட மாறுதல் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
|பதவி உயர்வு, பணியிட மாறுதல் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
மீன்சுருட்டி:
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மீன்சுருட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழக அரசு பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது பணியாற்றி வரும் சுமார் 20 ஆயிரம் விற்பனையாளர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். குறிப்பாக 20 கிலோ மீட்டருக்கு மேல் சொந்த ஊரில் இருந்து கடைக்கு தினமும் வந்து போகக்கூடிய சூழ்நிலைகள் இருந்து வருகின்றன. அது போன்ற விற்பனையாளர்களுடைய இடம் மாறுதல் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக பெண் பணியாளர்கள் கூட பணியிட மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர். காலியாக உள்ள சிற்றெழுத்தர், எழுத்தர் பணியிடங்களில் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வுகளையும் அளிக்க வேண்டும். இடமாறுதல்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றை அளித்துவிட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு செய்யக்கூடிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.