புதுக்கோட்டை
புதுக்கோட்டை நீர்ப்பாசனத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் கல்வெட்டுகள்
|புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர்ப்பாசனம் வரலாறு குறித்து கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
நீர்ப்பாசனங்கள்
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டைக்கு தனிச்சிறப்பு உண்டு. சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை நாடு சுதந்திரம் பெற்ற பின் ஓராண்டிற்கு பிறகு இணைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர்ப்பாசன வரலாறு குறித்து தொல்லியல் ஆய்வு கழகத்தினர் ஆராய்ந்துள்ளனர். இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:-
புதுக்கோட்டையில் வெள்ளாறு, பாம்பாறு, அக்னியாறு, அம்புலியாறு ஆகிய ஆறுகளும், 3,943 குளங்களும் இவற்றில் 139 குளங்கள் தலா 200 ஏக்கர் பாசன வசதியளிப்பவையாகவும் உள்ளன. இதை விடவும் அதிகமாக 500 ஏக்கர் பாசன வசதி (ஆயக்கட்டு) கொண்டவைகளாக இரும்பநாடு பெரிய கண்மாய், மிரட்டுநிலை பெரிய கண்மாய், கவிநாடு பெரிய கண்மாய், வல்லநாடு பெரிய கண்மாய், ரகுநாதபுரம் காரைக்குளம், செம்பாட்டூர் பெரிய குளம், அன்னவாசல் பெரிய குளம், பெருமாநாடு பெரியகுளம், வயலோகம் பெரிய குளம் ஆகியன உள்ளன. இவையனைத்தும் மாவட்டத்தின் ஆறுகளோடு சங்கிலித்தொடர் வரிசையில் இணைக்கப்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளாக இருந்து வருகின்றன.
கல்வெட்டுகள்
குறிப்பாக வெள்ளாற்றோடு இணைந்த நீர் பாசன குளங்களின் எண்ணிக்கை 1,166. இதன் மூலம் 828 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்றுள்ளதும், அக்னி ஆற்றோடு 710 குளங்களும், பாம்பாறு மூலம் 543, கோரையாறு மூலம் 429, காவிரி கடைமடையில் 230, அம்புலியாறு மூலம் 120, விருசுளியாறு மூலம் 236, மாமுண்டியாறு மூலம் 111, மணிமுத்தாறு மூலம் 47, மகாராஜா சமுத்திரம் மூலம் 88, திருநள்ளாறு மூலம் 23 குளங்கள் என 3,711 நீர்ப்பாசன குளங்கள் இருப்பதும் இவைகளில் பெரும்பாலானவை ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட குளங்களாக உள்ளன.
நீர்ப்பாசன முறை என்பது குளம் மட்டுமின்றி கிணற்று நீர் பாசனத்தை குறிப்பவையாக சமஸ்தான கல்வெட்டுகளில் ஏற்றத்தின் மூலம் நீர் இறைப்பது குறித்து "ஏத்த இறைவை என்று 305-வது கல்வெட்டிலும், ஏத்தக்கால் என்ற சொல்லுடன் 489, ஏத்தரம் என்ற சொல்லுடன் 156-வது கல்வெட்டுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.
தண்ணீர் பஞ்சம்
குளங்களில் உள்ள மடைகளில் அமைக்கப்பட்டுள்ள மடை பலகைக்கற்களில் குமிழி அமைத்த, அல்லது ஏரியை உருவாக்கியவர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் மிக மூத்ததாக கி.பி. 872-ல் புதுக்கோட்டை கவிநாடு கண்மாய், மாறன் சடையன் என்கிற பாண்டியனின் ஆட்சியில் மூதாண்டி பெருந்திணை என்கிற வல்லநாடு பகுதியை நிர்வகித்த அரசு அதிகாரி இந்த மடையை உருவாக்கிய செய்தியும், கந்தர்வகோட்டை நொடியூர் மருதன் ஏரியை முதலாம் ஆதித்த சோழரின் ஆட்சிக்காலத்தில் மங்கல நல்லூர் ரணசிங்க முத்தரையன் குமிழி அமைத்துள்ள செய்தி அடங்கிய கல்வெட்டையும் கொண்டு நீர்ப்பாசனத்தில் உள்ளூர் நிர்வாக தொடர்பையும் அறிய முடிகிறது. புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் கிராமப்புற விவசாயிகளுக்காக பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டுள்ளனர். 1858, 1871-ல் மிகக்கடுமையான தண்ணீர் பஞ்சமும், அதன் தொடர்ச்சியாக 1875-ம் ஆண்டு மழையின்மை காரணமாக விவசாயம் பொய்த்து போனதை தொடர்ந்து மக்கள் பொருட்களை வாங்க நிதியின்றியும், வேலையின்றியும் தவித்தனர்.