சிவகங்கை
13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
|13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
கல்லல் அருகே 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கள ஆய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆலங்குடி கிராமத்தில் அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் கள ஆய்வு செய்தார்.
அப்போதுஅவர் கூறியதாவது:- ஆலங்குடி என்னும் சிற்றூரின் கிழக்கே ஆண்ட புரீஸ்வரர் கோவில் வளாகத்தில் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268 - 1310) காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டின் தொடக்கத்தில் ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கலச்சொல்லுடன் கோச்சடை பன்மரான திருபுவன சக்ரவர்த்தி என தொடங்கும் கல்வெட்டு செய்தியின் மூலம் இந்தபகுதி கேரள சிங்கவள நாடு என அறியமுடிகிறது.
இந்த கல்வெட்டு செய்தியில் இந்த கோவில் காரியம் செய்வார் காளீஸ்வரர் கங்காணிகளும் சேர்ந்து பிள்ளையார் கோவிலுக்கு ஊர்மக்கள் ஒன்றுகூடி நிலம் தானம் செய்ததை செய்தியாக தெரிவிக்கிறது.
நில எல்லை
எட்டிக்குடியில் கிடைக்கப்பெற்ற மற்றொரு கல்வெட்டில் பிற்காலப்பாண்டியரான வீரபாண்டிய மன்னர் காலத்தை சேர்ந்தது. இந்த கல்வெட்டின் மூலம் திருத்தளி ஆண்ட நாயனாருக்கு தேவதானம் செய்யப்பட்ட செய்தி தெரிய வருகிறது. இந்த ஊர் குண்டாற்று எட்டுக்குடி என அறிய முடிகிறது.
தற்போது எட்டுக்குடிபட்டி என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டு அருகில் ஒரு சூலம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டு சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலப்பரப்பின் எல்லையில் நடுவது வழக்கம். கல்வெட்டு அருகே சிவன் கோவிலும் இருப்பதால் கோவிலுக்கான நில எல்லையை குறிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.