தேனி
உயர்கல்விக்கு உறுதுணையான புதுமைப்பெண் திட்டம்
|அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? என்பது பற்றி மாணவிகள், பேராசிரியர் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
மாதம் ரூ.1,000 உதவித்தொகை
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.
ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.
புதுமைப்பெண் திட்டம்
இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
3-வது தவணையாக...
விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 1,418 மாணவிகள் உதவித்தொகை பெற்று வருகின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து உதவித்தொகை கிடைக்கும் என்று தெரிகிறது. அரசின் இந்த புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு சரியாக கிடைக்கிறதா? அந்த தொகை எந்த அளவுக்கு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது? என்பது குறித்து மாணவிகள் கூறியதாவது:-
பயனுள்ள திட்டம்
வான்மதி (பழனி):- புதுமைப்பெண் திட்டத்தில் எனக்கு உதவித்தொகை கிடைக்கிறது. பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு அரசு உதவுவது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. இது பள்ளியில் படித்து கொண்டிருக்கும் மாணவிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும். இதன்மூலம் பாரதி கண்ட புதுமை பெண்களாக அனைவரும் மாறுவார்கள்.
மெடோலின்நித்யா (மாரம்பாடி):- நான் கடந்த 2 மாதங்களாக உதவித்தொகை பெற்று வருகிறேன். இந்த உதவித்தொகை மூலம் கல்வி கட்டணத்தை சிரமமின்றி எளிதாக செலுத்த முடிகிறது. பயனுள்ள இந்த திட்டத்தால் கிராமப்புற மாணவிகள் அனைவருக்கும் உயர்கல்வி கிடைத்து விடும்.
பரணி (கோவிலூர்):- பெற்றோர் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் படித்து வந்தேன். தற்போது தமிழக அரசின் ரூ.1,000 உதவித்தொகை கிடைப்பதால் மகிழ்ச்சியாக படிக்க முடிகிறது. என்னை போன்ற பல மாணவிகளுக்கு உதவித்தொகை பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே அதை பயன்படுத்தி மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும்.
கனவு நனவாகிறது
நிஷா (பழனி):- தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதால் பெண்களின் உயர்கல்வி கனவு தடையின்றி நனவாகி விடும். பல குடும்பங்களில் பெண்களின் கல்விக்கு தடையாக இருப்பதில் பொருளாதாரமும் ஒன்றாக இருக்கிறது. அந்த தடையை உடைத்து பெண்கள் கல்வியில் சாதிப்பதற்கு புதுமை பெண் திட்டம் பெரும் உதவியாக இருக்கிறது.
விஜயலட்சுமி (காமனூர்):- புதுமைப்பெண் திட்டத்தில் கடந்த 2 மாதமாக உதவித்தொகை கிடைத்து வருகிறது. உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் ஏழை, எளிய மாணவிகள் கல்வி கட்டணத்தை எளிதாக செலுத்த முடிகிறது. இதனால் ஏழை, எளிய மாணவிகளின் கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது.
2 மாத உதவித்தொகை
கலையரசி (திண்டுக்கல்):- நான் தனியார் வங்கியில் கணக்கு தொடங்கியதால் உதவித்தொகை வரவில்லை. எனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி மீண்டும் விண்ணப்பித்து இருக்கிறேன். அது ஏற்கப்பட்டு உள்ளதால் உதவித்தொகை விரைவில் கிடைத்துவிடும். அதேநேரம் விடுபட்ட 2 மாத உதவித்தொகையையும் சேர்த்து வழங்கினால் நன்றாக இருக்கும்.
போதும் பொண்ணு (கோவிலூர்):- ஆதார் அட்டையுடன் எனது செல்போன் எண்ணை இணைக்காததால் எனது விண்ணப்பம் திரும்ப வந்துவிட்டது. அதை சரிசெய்து மீண்டும் விண்ணப்பித்து இருக்கிறேன். அது ஏற்கப்பட்டு விட்டதால் விரைவில் உதவித்தொகை கிடைத்துவிடும். என்னுடன் விண்ணப்பித்த பலர் 2 மாதம் உதவித்தொகை வாங்கிவிட்டனர். எனக்கும் விடுபட்ட அந்த 2 மாத உதவித்தொகையை சேர்த்து வழங்கினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.