கள்ளக்குறிச்சி கலவரத்தில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் - டி.ஜி.பி அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
|கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என டி.ஜி.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் அவர் படித்த பள்ளிக்கூடத்தை சூறையாடிய வழக்கில் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிலர் இன்று சென்னை வந்து, டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்த மனு தொடர்பாக அவர்கள் நிருபர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கூடத்தை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வை எழுத சென்றவர்கள். ஆஸ்பத்திரிக்கு சென்றவர்கள் ஆவார்கள். இப்படி பல அப்பாவி மக்களும் போலீசாரின் பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவரது தந்தை இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் கூட அந்த நபர் பங்கேற்க முடியவில்லை. இன்னொருவரின் தாயார் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இப்படி நடைபிணமாக அவர்கள் இருந்து வருகிறார்கள். விவசாயம் செய்ய விதை வாங்க சென்றவர்கள், பெட்ரோல் பங்குகளுக்கு சென்றவர்கள் என இயல்பான நடைமுறையில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
என்ன வன்முறை என்பதே தெரியாமல் கைது செய்யப்பட்டோரும் உண்டு. இதுதொடர்பான மனுவை டி.ஜி.பி.யிடம் கொடுத்தோம். அவர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோரில் கிட்டத்தட்ட 100 பேர் அப்பாவிகளாக இருக்கிறார்கள்.
தமிழக அரசும் இதில் தலையிட்டு, உண்மை நிலையை ஆராய்ந்து அவர்களை விடுதலை செய்யவேண்டும். வழக்கில் இருந்து விடுவிப்பதுடன், உரிய நஷ்ட ஈடும் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.