நாக்கில் காயம்.. வாடும் காட்டு யானை... தீவிர சிகிச்சையில் இறங்கிய மருத்துவர்கள் - தற்போதைய நிலை என்ன?
|காரமடை அருகே நாக்கில் காயத்துடன் சுற்றிய காட்டு யானைக்கு, பொள்ளாச்சி வரகளியாறு முகாமில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை வெள்ளியங்காடு பகுதியில் 3 நாட்களாக காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். யானையை விரட்ட வந்த வனத்துறையினருக்கு யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
காட்டு யானையின் நடு நாக்கில் வெட்டு காயம் இருப்பதால் கீழ் நாக்கு செயலிழந்துள்ளதால் சாப்பிடும் உணவை சாப்பிடமுடியவில்லை. இதனால், யானை அவதியடைந்துவரும் நிலையில், மிகவும் சோர்வுடன் கானப்பட்டது.
இதையடுத்து வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானைக்கு மயக்க மருந்து கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த யானை, லாரி மூலம் பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அடுத்த வரகளியாறு முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. யானை ஒரு மரக்கூண்டில் அடைக்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த யானையை தொடர்ந்து கண்காணிக்க 3 டாக்டர்கள் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. தற்போது யானையின் நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், மருத்துவர்கள் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.