காயம் அடைந்த கண்ணாடி விரியன் பாம்புக்கு 12 தையல் போட்டு சிகிச்சை.. வைரல் வீடியோ
|பாம்பின் வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்,
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பாம்பை கைகளால் பிடிப்பதில் சகாதேவன் என்பவர் (வயது 40) வல்லவர். இவர், மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் திருநகர் 4-வது பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக்காக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் அவருக்கு திருநகர் ஜோசப் நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர், செல்போனில் தொடர்பு கொண்டு தன் வீட்டின் வேலியில் பாம்பு புகுந்து இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என தெரியவந்தது.
சுமார் 4 அடி நீளம் கொண்ட அந்த பாம்பை லாவகமாக சகாதேவன் பிடித்தார். அப்போது அந்த பாம்புக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு, அது உயிருக்கு போராடுவதை அறிந்தார். உடனே மதுரை பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு அந்த பாம்பை எடுத்து வந்தார். அங்கு டாக்டர் ஜெய கோபி, பாம்புக்கு ஏற்பட்ட நிலையை அறிந்து உடனடியாக மயக்க மருந்து செலுத்தினார்.
வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சிகிச்சை அளித்து 12 தையல் போடப்பட்டது. பின்னர் பாம்புக்கு மயக்கம் தெளிந்து நெளிந்தவுடன் வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, பாம்பை ஒப்படைத்தனர்.
நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அடர் வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது. காயம் விரைவில் சரியானதும் பாம்பு இயல்பு நிலைக்கு வந்துவிடும் என டாக்டர் தெரிவித்தார். அதே நேரத்தில் பாம்பை காப்பாற்ற உதவிய சகாதேவனை கால்நடை டாக்டர், வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.