கிருஷ்ணகிரி
மனநல நல்லாதரவு மன்றம் தொடக்கம்
|கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு மனநலசேவை விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.
குருபரப்பள்ளி:-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு மனநலசேவை விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.
மனநல நல்லாதரவு மன்றம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மன உறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு - மனநல சேவை 14416 விரிவாக்க விழாவை காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு - மனநல சேவை 14416 விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-
சிறப்பான மருத்துவ சேவை
தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய மக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில், தமிழக முதல்- அமைச்சர் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல நல்லாதரவு மன்றம் "மனம்" மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 அறிவித்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் மனம் என்று அழைக்கப்படும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.
மனம் திட்ட தூதுவர்கள்
இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் கூடுதலான நற்பயனை தரும். இக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள மனநல நல்லாதரவு மன்ற தலைவராக மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்கீதா, துணை முதல்வரும், உயிர்வேதியியல் துறைத் தலைவருமான சாத்விகா, உடற்கூறியியல் துறை இணை பேராசிரியர் சுபதா,
பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் சசிகுமார், மயக்கவியல் துறை பேராசிரியர் நந்தபிரபு, அறுவை சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் பத்மநாபன், சுந்தராம்பாள், மனநலத்துறை முதுநிலை உள்ளுரை மருத்துவர் முனிவேல், இளநிலை உள்ளுரை மருத்துவர் பூங்கொடி, முதலாம் ஆண்டு கல்லுரி மாணவ, மாணவிகள் துர்கேஷ், சேனாதித்தா, ஸ்டேன்லிபால், ரேஷ்மா, ஷாலினி, காஷித்ஜெயின் உள்ளிட்டோர் மனம் திட்டத்தின் தூதுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுகின்றனர்.
பயன் பெறலாம்
இத்திட்டத்தில் மேற்கண்ட மருத்துவர்களும், மாணவர்களும் தன்னார்வ அடிப்படையில் மனநல நல்லாதரவு மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மனநல மேம்பாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட மனநல தூதுவர்கள் மூலமாக கல்லுரியில் உள்ள இதர ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 என்ற எண் மூலம் அனைவரும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.சங்கீதா, நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.பரமசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் மற்றும் மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர்கள், மருத்துவ கல்லுரி மற்றும் பள்ளி, மாணவ, மாணவிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மனநல மருத்துவரை அணுக செல்போன் எண்
உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் "மனம்" என்ற செல்போன் எண் 63797 93630 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.