கிளாம்பாக்கத்தில் புறநகர் ரெயில் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்
|சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரெயில் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், வரும் காலத்தேவையை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை புறநகரில் அமையும் பேருந்து நிலையத்தின் அருகே ரெயில் பாதை செல்வதால் ரெயில் நிலையம் அமைத்தால், மக்கள் எளிதாக சென்னை நகருக்குள் செல்ல முடியும் என்று தமிழக அரசு சார்பில் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று புதிய ரெயில் நிலையம் அமைக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறார்.
புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை கோட்ட ரெயில்வே துறை சார்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கான சர்வே மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்ததும் வேலைக்கான டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய ரெயில் நிலையம் கட்டுவதற்கு ரூ.20 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.4 கோடி நிதியை வழங்க முடிவு செய்துள்ளது. புதிய ரெயில் நிலையத்துக்கான நிலங்கள் ரெயில் பாதையின் இருபுறமும் கிடக்கின்றன. இது தவிர தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன.
ரெயில் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டதும், வருவாய் துறை சார்பில் ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய ரெயில் நிலையம் பஸ் நிலையத்துக்கு இணைப்பாக அமைவது வடசென்னை மற்றும் தென் சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.