அரியலூர்
தொடர் விடுப்பு எடுத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்
|தொடர் விடுப்பு எடுத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு அளிக்கும் போராட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின்போது சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 500 கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் சார்பில் விவசாயக்கடன், ஆடு, மாடு வளர்ப்பு கடன், நகைக்கடன், வணிக கடன் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கு உண்டான தொகையை இதுவரை அரசு தரவில்லை. இதனால் சங்கங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பொது வினியோக திட்டத்தால் சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
பணிகள் பாதிப்பு
தற்போது தேவை இல்லாத நிலையில், டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், டிரோன் மருந்து தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப் படுத்தப்படுகிறோம். எனவே இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த மாவட்ட அளவில் மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தை கைவிடும் வரை அல்லது ஒழுங்குபடுத்தும் வரை அனைத்து பணியாளர்களும் விடுப்பில் செல்கின்றனர். அதோடு அனைத்து மாவட்டங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட கருவிகள் மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.
மேலும் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று அரியலூர் மாவட்டத்தில் விவசாய கடன், நகைக்கடன், உரம் மற்றும் பூச்சி மருந்து வினியோக பணிகள் அனைத்தும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.