சென்னை
சென்னை வரலாற்று முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் - சென்னை மாவட்ட கலெக்டர்
|சென்னை மாவட்டத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களின் கைவசம் இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டர் க.அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களின் கைவசம் இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கலாம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணங்கள் நமது தேசிய பாரம்பரியத்தை எடுத்து கூறுவதாக உள்ளதால், இவற்றினை தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாக்க திட்டமிட்டு உள்ளது. அவற்றினை, முறையாக சரி செய்து கணினிமயமாக்குவதன் வாயிலாக நம் கலாசாரம் மற்றும் பாரம்பாரியத்தின் அடிச்சுவடு மாறாமல் பாதுகாத்திட இயலும்.
எனவே, சென்னை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், மடங்கள், சர்ச், மசூதி மற்றும் தனியார் நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்தால், அதன் விவரத்தினை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 044 - 25228025 என்ற எண்ணில் தகவல் தொரிவிக்கலாம். மேலும், collrchn@nic.in என்ற இ-மெயில் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.