கன்னியாகுமரி
குமரியில்கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் வாட்ஸ்-அப் எண்ணை வெளியிட்டது போலீஸ்
|குமரியில்கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று வாட்ஸ்-அப் எண்ணை போலீஸ் வெளியிட்டது
நாகர்கோவில்:
தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து 23 பேர் பலியானார்கள். மேலும் தஞ்சாவூர் பகுதியில் மது குடித்த 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போலி மது விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் நாகர்கோவில் மற்றும் தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மலையோர பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே அனுமதியின்றி செயல்பட்ட 90 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் மீதும், போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கஞ்சா மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி போலீசுக்கு 8122930279 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.