'துணை முதல்-அமைச்சர் பதவி பற்றிய தகவல் தவறானது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
|தனக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக பரவும் தகவல் தவறானது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் செஸ் ஒலிம்பியார் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது போல், ஆசிய ஹாக்கி போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்றார். மேலும் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடத்தப்படும் விழாவிற்கு பிரதமருக்கு அழைப்பு விடுப்போம் என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், துணை முதல்-அமைச்சர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தனக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக பரவும் தகவல் தவறானது என்றும், எதன் அடிப்படையில் இந்த தகவல் பரப்பப்படுகிறது என்பது தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.