சிவகங்கை
விவசாயிகளுக்கு மானியத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் தோட்டக்கலை இணை இயக்குனர் தகவல்
|தேவகோட்டை மற்றும் கண்ணங்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தோட்டகலை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை,
தேவகோட்டை மற்றும் கண்ணங்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தோட்டகலை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மானிய திட்டங்கள்
தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யா தெரிவித்துள்ளதாவது:-
விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் வீரிய ஒட்டு காய்கறிகள் சாகுபடி (மிளகாய் மற்றும் கத்தரி நாற்றுகள்) மா அடர் நடவு, கொய்யா அடர் நடவு, பலா சாகுபடி, எலுமிச்சை சாகுபடி, நெல்லி ஆகியவற்றை சாகுபடி செய்ய தேவகோட்டை அரசு தோட்டக்கலைப்பண்ணையில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
உதிரி மலர்கள் சாகுபடிக்கு (சாமந்திப்பூ) உரிய நாற்றுகள் மானியத்தில் பெறலாம். தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் மானியத்திலும் நீர் ஆதாரத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.75 ஆயிரம் மானியமும், வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.87 ஆயிரம் மானியமும், மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியமும் வழங்கப்பட உள்ளது.
இயற்கை விவசாயம்
மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மானியத்தில் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலவுடைமை ஆவணங்களுடன்(கணினி பட்டா, அடங்கல்) பாஸ்போர்ட் புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம். மேலும் www.tnhortnet.gov.in என்ற துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேவகோட்டை வட்டாரத்தில் பஞ்சாயத்து கிராமங்கள் மற்றும் கண்ணங்குடி வட்டார பஞ்சாயத்து விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மேற்கண்ட அனைத்து திட்ட இனங்களிலும் பங்குபெற்று விவசாயிகள் பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.