சிவகங்கை
கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்து பயன் பெறலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
|தற்போது பெய்து வரும் கோடைமழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
தற்போது பெய்து வரும் கோடைமழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கோடை மழை
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறி்ப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் எக்டேர் பரப்பளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான நிலப்பரப்பு பருவமழையினை நம்பியே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆதலால், கோடைகாலத்தில் பெய்திடும் மழையினை பயன்படுத்தி நிலத்தில் கோடைஉழவு செய்து பயன்பெறலாம். கோடைஉழவானது பயிர் அறுவடையான உடன் செய்திடல் வேண்டும். மேலும் ஒவ்வொருமழைக்கு பின்னரும் செய்தல் அவசியம். நிலச்சரிவில் குறுக்காகவும் மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவுசெய்ய வேண்டும்.
2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டி கலப்பை கொண்டு உழவுசெய்யவேண்டும். கோடைஉழவு செய்வதால் மண் மிருதுவாகி மழைநீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது. மண் அரிமானம் கட்டுபடுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது. முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
கோடை உழவு
கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது. கோடைஉழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும், கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்ப்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. கோடைஉழவினால் மண்ணில் வாழும் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு காரணமான பூசாணங்கள் செலவின்றி அழிக்கப்படுகின்றன.
பயிர் பாதுகாப்பு நடைமுறைகளான களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு யாவும் செலவின்றி செயற்கை ரசாயனங்களின்றி கட்டுப்படுத்தப்படுவதால் ரசாயன பின் விளைவுகளை காற்றுமாசுபடுவது, தண்ணீர் மாசுபடுவது, வேளாண் நிலங்கள் மாசுபடுவது மற்றும் பிறஉயிரினங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.
பயன்பெறலாம்
எனவே, தற்போது மாவட்டத்தில் கோடைமழை பரவலாக பெய்துவருவதால், மேற்காணும் பயன்களைபெரும் பொருட்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும் கோடைஉழவு செய்து பயன்பெறலாம். மேலும் கோடை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களான யூரியா 2000 மெ.டன், டி.ஏ.பி. 800 மெ.டன், பொட்டாஸ் 333 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1300 மெ.டன் ஆகியவை கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.