சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,433 மாணவர்கள் எழுதுகின்றனர் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
|சிவகங்கை மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 தேர்வை 16,433 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் என முதன்மை கல்வி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 தேர்வை 16,433 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் என முதன்மை கல்வி தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வு
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுதேர்வுகள் இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 69 அரசு பள்ளிகள் உள்பட 163 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்களும் 8,808 மாணவிகளும் என 16,433 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதுதவிர 241 பேர் தனித் தேர்வர்களாக தேர்வெழுதுகின்றனர். பிளஸ்-2 தேர்வில் கண் குறைபாடு மற்றும் நரம்பியல் குறைபாடு உடைய 75 மாற்றத்திறனாளிகளில் 56 பேருக்கு சொல்வதை எழுதுவதற்காக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ்-1 தேர்வு
இதேபோல் பிளஸ்-1 பொது தேர்வினை 7,076 மாணவர்களும் 8,398 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 474 பேர் எழுதுகின்றனர். இது தவிர 158 பேர் தனி தேர்வர்களாக எழுதுகின்றனர். இந்த தேர்வு எழுதும் 79 மாற்று திறனாளிகளின் 65 பேர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு பணிக்காக 46 வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள், 79 முதன்மை கண்காணிப்பாளர்கள், 79 துறை அலுவலர்கள், 1239 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 64 நிலையான படையினர் 24 வழிதட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர மாவட்டத்தில் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.