மதுரை
மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் விற்பனைக்குழு செயலாளர் தகவல்
|மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் தெரிவித்தார்.
வாடிப்பட்டி
மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் தெரிவித்தார்.
மின்னணு தேசிய வேளாண் சந்தை
மதுரை மாவட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை மூலம் விவசாயிகளின் தேங்காய், கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் கருப்பு கவுனி, சொர்ண மசூரி ஆகிய விளைபொருட்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் வங்கி கணக்கு விவரம், ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை மின்னணு தேசிய வேளாண்மை சந்தை இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.
விவரங்கள் பதிவு
அதனால் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் விற்பனை கூட மேற்பார்வையாளர் அபிநயாவிடம் கொடுத்து மின்னணு தேசிய வேளாண்மை சந்தை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அடையாள திறவு விடுவிப்பான் (லாகின் ஐடி) பெற்றுக்கொண்டு மின்னணு தேசிய வேளாண்மை சந்தை மூலம் விற்பனை செய்யும் அனைத்து ஒழுங்குமுறை கூடத்திலும் லாகின் ஐடியை மட்டும் தெரிவித்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.