சிவகங்கை
அரசு பள்ளிகளின் கல்விசாரா மன்ற போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு முதன்மை கல்வி அலுவலர் தகவல்
|அரசு பள்ளிகளின் கல்விசாரா மன்ற போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க, இலக்கியம், கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவ மன்றங்களை புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும் என பள்ளிகல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் மன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் ஆகியவற்றினை ஒவ்வொரு அரசு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் பங்கு பெறுவார்கள். அதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள். அத்துடன் அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். எனவே, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.