சிவகங்கை
நெல் சாகுபடிக்கு பிறகு உளுந்து பயிரிட்டு பயன் பெறலாம்-வேளாண்மை துணை இயக்குனர் தகவல்
|நெல் பயிருக்கு பின் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம் என்று வேளாண்மை துணை இயக்குனர் தெரிவித்தார்.
சிவகங்கை,
நெல் பயிருக்கு பின் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம் என்று வேளாண்மை துணை இயக்குனர் தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
சிவகங்கையை அடுத்த படமாத்தூரில் அட்மா திட்ட மானாவாரி விவசாயம் பற்றிய விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இ்ந்த முகாமிற்கு சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் கதிரேசன் முன்னிலை வகித்தார்.
பயிற்சியில் செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி மையம் தலைவர் வீரமணி கூறுகையில், இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய உற்பத்தி ஆண்டாக கொண்டாடி வருகிறோம். அனைத்து விவசாயிகளும் சிறுதானிய பயிர் சாகுபடி செய்வதால் தண்ணீர் உபயோகம் குறைவாக தேவைப்படுகிறது. இதனால் அதிக அளவில் சாகுபடி செய்து சிறுதானியம் உற்பத்தியில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்றார்.
நெல் சாகுபடி
பேராசிரியர் உமா மகேஸ்வரி கூறுகையில், மானாவாரி சாகுபடியில் கொடுக்காப்புளி சாகுபடி, சிமை இலந்தை சாகுபடி, டிராகன் பழசெடி சாகுபடி செய்வதால் தண்ணீர் மிக குறைந்த அளவே தேவைப்படுகிறது. மூன்று வருடங்களில் பயன்தரும் லாபகரமான தொழிலாக உள்ளதால் விவசாயிகள் தொழில்நுட்பங்களை கடைபிடித்து பயன்பெறலாம் என்றார்.
வேளாண்மை துணை இயக்குனர் கதிரேசன் கூறுகையில், நெல் பயிருக்கு பின் உளுந்து சாகுபடி செய்து பயிர் சுழற்சியை மேற்கொள்வதால் மண்வளம் பாதுக்கப்படும். இதற்கு உர தேவைகள் குறைவாகவே இருக்கும். குறைந்த நாட்களில் அறுவடை செய்து மகசூல் பெறலாம். ஆதலால் நெல் சாகுபடிக்கு பின் உளுந்து பயிரிட்டு விவசாயிகள் பயனடையலாம். பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா, தொழில்நுட்ப மேலாளர் சத்யா, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.