தர்மபுரி
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் கலெக்டர் சாந்தி தகவல்
|தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் இடங்கள் குறித்து கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வைக்கப்படும் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவையை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் வைக்கோல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்கவும், பந்தல் அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
6 இடங்களில் அனுமதி
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர், மக்கக்கூடிய, நச்சுக்கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப்படும்.
இதன்படி வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, கேசர் குளிஅல்லா அணை, தென் பெண்ணையாறு, ஒகேனக்கல் காவிரி ஆறு ஆகிய 6 இடங்களில் கரைக்க அனுமதிக்கப்படும். எனவே விதிமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்படி பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.