< Back
மாநில செய்திகள்
தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
தர்மபுரி
மாநில செய்திகள்

தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்

தினத்தந்தி
|
31 Aug 2023 1:00 AM IST

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி, லளிகம் மற்றும் நார்த்தம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளுக்கு ரூ.64.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாக்களுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாக்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

விழாக்களில் அமைச்சர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தர்மபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்து, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் முறையாக பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதிபடுத்திடும் பணியை வழங்கியுள்ளார். இதற்கிணங்க தர்மபுரி மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக வருகை புரிந்து, பல்வேறு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறேன். அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மக்கள் பணிகளை முறையாக மேற்கொண்டால் மட்டுமே தொடர்ச்சியாக மக்கள் அங்கீகாரத்தினை பெற முடியும்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மகளிருக்கென கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தினை அறிவித்து, செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகளுக்கு நகர பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் மகளிரின் பயணச்செலவு குறைந்து, மாதாந்திர சேமிப்பாக சேமிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என்ற சிறப்பானதொரு திட்டத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்து, திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமினை தொப்பூரில் தொடங்கி வைத்தார்.

விண்ணப்பத்தாரர்களிடம் விண்ணப்பத்தின் உண்மைத்தன்மை குறித்து அலுவலர்கள் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.1000உரிமைத்தொகை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனுக்கென செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களாகிய நீங்கள் முறையாக அறிந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், சார்பு அணி அமைப்பாளர்கள் டாக்டர் இளையசங்கர், எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், பெரியண்ணன், கவுதம், முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், மல்லமுத்து, வைகுந்தன், கைம்பெண் நலவாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், லோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தனலட்சுமி சரவணன் (தளவாய்அள்ளி), பரிமளா மாதேஸ்குமார் (இலளிகம்), கலைச்செல்வன் (நார்த்தம்பட்டி) மற்றும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்