தர்மபுரி
மாவட்டத்தில் 111 பள்ளிகளை சேர்ந்த13,367 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கலெக்டர் சாந்தி தகவல்
|தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 111 பள்ளிகளை சேர்ந்த 13,367 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
விலையில்லா சைக்கிள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் கல்வி ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் 111 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயின்ற 6,017 மாணவர்கள், 7,350 மாணவிகள் என மொத்தம் 13,367 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6.45 கோடி ஆகும்.
கல்வியின் மீதே கவனம்
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் 17,218 மாணவ, மாணவிகளுக்கும், 2020-21-ம் கல்வி ஆண்டில் 14,354 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் நூலகங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து கவனமும் கல்வியின் மீதே இருக்க வேண்டும். கல்வியே உங்களது சந்ததியினரை உயர்த்தும் ஆயுதம் ஆகும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, துணை தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன், ஒன்றிய கவுன்சிலர் வடிவேல், அதகப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் பஸ்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி, நிர்வாகி கவுதம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.