மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,700 கன அடியாக நீடிப்பு
|மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 34-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்,
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழக-கர்நாடகா எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் விநாடிக்கு 20,200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையில் விநாடிக்கு 21,200 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையும் அதே நிலை நீடிக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடி வீதமும், கால்வாயில் 200 கன அடி வீதமும் என மொத்தம் 21,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன.
தொடர்ந்து 34-வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.