குழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் - தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
|அரசு மருத்துவமனைகளில், குழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில், குழந்தையின்மை சிகிச்சை மையங்களை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகம் முழுவதும் 155 குழந்தையின்மை சிகிச்சை மையங்கள் இயங்கி வரும் நிலையில், ஒன்று கூட அரசு மருத்துவமனையில் இல்லை என்று கூறியுள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிசிச்சைக்கு ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்ச ரூபாய் வரை செலவாவதால், ஏழை மக்கள் சிகிச்சை பெற இயலாமல், மன உளைச்சலுடன் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகளும், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளும் உள்ள நிலையில், செயற்கை கருத்தரிப்பு வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் மிகவும் அவசியம் என்றும் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை போலவே அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் குழந்தையின்மை சிகிச்சை மையங்களைத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.