< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர் மாராபட்டு பாலாற்றில் கலந்த தொழிற்சாலை கழிவுநீர்... நுரை பொங்கி துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு
மாநில செய்திகள்

திருப்பத்தூர் மாராபட்டு பாலாற்றில் கலந்த தொழிற்சாலை கழிவுநீர்... நுரை பொங்கி துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
5 Nov 2023 1:15 PM IST

ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி காணப்படுகிறது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓரிரு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் இரவு நேரங்களில் நேரடியாக கழிவுநீர் திறந்துவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக ஆற்று நீரில் நுரை பொங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றில் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபோது மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மாராபட்டு பாலாற்றின் மீதுள்ள பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி காணப்படுகிறது. அதிகாரிகள் இது குறித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்